தஞ்சையில் நடைபெற்ற செல்ல பிராணிகள் தத்தெடுக்கும் முகாமில் ஆதரவற்ற நாய்க்குட்டியை தத்தெடுத்தார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்
தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் (SPCA) சார்பில் நடைபெற்ற செல்லப் பிராணிகள் தத்தெடுக்கும் முகாமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை SPCA வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர், சாலையோரத்தில் கண்டறியப்பட்ட ஒரு ஆதரவற்ற நாய்க்குட்டியை தத்தெடுத்து, உறவில்லாத பிராணிகளுக்கு உறவை உருவாக்கும் முயற்சிக்கு முன்னுதாரணமாக அமைந்தார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், “தஞ்சாவூர் SPCA கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ஆதரவற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை வழங்கி வருகிறது. நாய்களை அல்லது பிற செல்ல பிராணிகளை துன்புறுத்தாமல், அதனை பாதுகாப்பது நமது கடமை. உயர்தர நாய்களை வளர்ப்பதை விட நாட்டு இன நாய்களை தத்தெடுத்து வளர்ப்பது மிகவும் பொருத்தமானது, ஏனெனில் அவை நன்றி மிகுந்தவை, மற்றும் அதன் பராமரிப்பு செலவுகள் குறைவானவை. இந்த முகாம், அந்த விழிப்புணர்வை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார். மேலும், SPCA தொடர்ந்து மாதாந்திர முகாம்கள், விரைவில் நாய்கள் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் என்றார்.
இன்று நடைபெற்ற முகாமில் மொத்தம் 49 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 44 நாய்க்குட்டிகளும் 3 பூனைக்குட்டிகளும் பொதுமக்களுக்கு தத்து கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற இந்த முகாமில், இலவச வெறிநாய் தடுப்பூசி வழங்கப்பட்டதுடன், பலர் இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
பங்கேற்பாளர்கள்
இந்த முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன், SPCA மருத்துவர் டாக்டர் ஜனனி, மாநகர நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், SPCA உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமது ரஃபி, விஜயலட்சுமி, மற்றும் ரெட்கிராஸ் மாவட்ட துணைச் சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை EWET சதீஷ்குமார் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்தனர்.